குளித்தலையில் மாசிமக தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குளித்தலை: குளித்தலை, கடம்பந்துறை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவிலில், மாசி மக பெருந்திருவிழா கடந்த, 2ல் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தினமும் சுவாமி திருவீதி உலா வந்தது. 10வது நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை, 8:45 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக, தேர் ஏறிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., மாணிக்கம், கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அன்னதானம், நீர், மோர் மற்றும் பானங்கள் வழங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 9:00 மணிக்கு திருச்சி மாவட்டம், திருஈங்கோவில்மலை சுவாமிகள், கடம்பர் கோவில் சுவாமிகள் சந்திப்பு, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.