உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பணம் பதுக்கிய விவகாரம்; கரூர் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பணம் பதுக்கிய விவகாரம்; கரூர் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கரூர்: கரூர் அருகே, குட்கா வியாபாரிகளிடம் பணம் பதுக்கிய விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் உள்பட, எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு கடந்த, 30ல், தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார், தான்தோன்றிமலை எஸ்.எஸ்.ஐ., செந்தில் குமார், வெங்கமேடு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ரகுநாத் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 1.34 லட்ச ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. பிறகு, காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேவசர்சன், 40, சுரேஷ், 19, ஹரிராம், 27, ஆகிய மூன்று பேரை வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., சித்ரா தேவி கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தார்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, பதுக்கி விட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, போலீசாரிடம் விசாரணை நடத்த, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தான்தோன்றிமலை எஸ்.ஐ., உதயகுமார், வெங்கமேடு எஸ்.ஐ., சித்ராதேவி, எஸ்.எஸ்.ஐ., செந்தில் குமார், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ரகுநாத், போலீஸ் ஏட்டுக்கள் உதயகுமார், விக்னேஷ், போலீஸ் தம்பிதுரை ஆகியோரிடம், திருச்சி டி.ஐ.ஜி., அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை, போலீசார் பதுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட, எட்டு பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி