| ADDED : நவ 29, 2025 01:43 AM
குளித்தலை, குளித்தலை அருகே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, ஜோசமாதா நாயக்கனுாரில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் குடிநீர் இல்லாததால், விவசாய கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தட்டுப்பாடு இல்லாத குடிநீர் வழங்க வேண்டி கிராம மக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணராயபுரம் யூனியன் பொது நிதியிலிருந்து, ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஆகியும் போர்வெல் அமைக்காமலும், மின் இணைப்பு மற்றும் குழாய் போடாமல் கிடப்பில் வைத்துள்ளனர்.குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு, பொதுமக்கள் வாகனங்களில் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே, கிராம மக்கள் பாதிக்காத வகையில், உடனடியாக புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.