நிழற்கூடம் முன் வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி
கரூர் :கரூர் அருகே, பயணிகள் நிழற்கூடம் முன், வாகனங்களை நிறுத்துவதாலும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதாலும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-திருச்சி சாலையில் லைட்ஹவுஸ் கார்னர் பஸ் ஸ்டாப்பில், முன்னாள் தி.மு.க., எம்.பி., பழனிசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பல ஆண்டுகளுக்கு முன் பயணி கள் நிழற்கூடம் கட்டப்பட்டது. கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் அழைத்து செல்கின்றனர்.இந்நிலையில், நிழற்கூடத்தை மறைத்து நாள்தோறும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களும் நிழற்கூடத்தை சுற்றி வைக்கப்படுவதால், பயணிகள் பஸ்சுக்காக சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.எனவே, கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள, பயணிகள் நிழற்கூடம் முன், வாகனங்களை நிறுத்துவோர் மீதும், பிளக்ஸ் பேனர்களை வைப்பவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.