மேலும் செய்திகள்
சாலை சீரமைக்கணும்
13-Aug-2025
அரவக்குறிச்சி பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, நகராட்சி கமிஷனரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஷா நகரில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை, சாக்கடை சுத்தம் செய்வது கிடையாது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வருவதில்லை; குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று ஷா நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.இதை பயன்படுத்தி, அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்று முகாமில், அதிகாரிகளிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர். இதை தெரிந்து கொண்ட அரவக்குறிச்சி போலீசார் மற்றும் நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அடிப்படை வசதிகள் கூட செய்து தருவதில்லை எனக்கூறி, நகராட்சி கமிஷனரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், உங்களுடைய அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மனுக்களை அளித்து விட்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.
13-Aug-2025