கட்டாய திருமணத்துக்காக கடத்தப்பட்ட பெண் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
குளித்தலை :கட்டாய திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடவூர் பஞ்சாயத்து, டி.இடையபட்டி கவுண்டம்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் இளம் பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம், அப்பெண் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார், இளம் பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ராசாம்பாளையம் ராமலிங்கம் மகள் காவியா, 24, என்பதும், எம்.காம்.,- சி.ஏ., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது.நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில், தோட்டத்து வீட்டில் காவியா தனியாக இருந்துள்ளார். அப்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அத்திப்பாளையம் ஜெகநாதன், 34, இவரது உறவினர் பழனிசாமி மனைவி ராஜேஸ்வரி, 50, ஆகிய இருவரும் அங்கு வந்துள்ளனர். அவர்கள் மிரட்டி காவியாவை கடத்தி சென்று, இடையப்பட்டி கவுண்டம்பாளையம் சக்திவேல் மனைவி தமிழ்ச்செல்வி வீட்டில் வைத்திருந்தனர். அவர்கள், என்னை கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததை அறிந்து, அங்கிருந்து நான் தப்பி வந்துள்ளேன். என் பெற்றோரிடம் அழைத்து செல்லுங்கள் என, போலீசாரிடம் காவியா தெரிவித்தார்.இதையடுத்து, காவியாவை மீட்ட போலீசார், அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். பின்னர் காவியாவின் பெற்றோர், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் வந்து, காவியாவை அழைத்துச் சென்றனர். மகளை மீட்டு கொடுத்த போலீசாருக்கு, பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.