போலியோ சொட்டு மருந்து முகாம்
கரூர்:கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில், மாநகராட்சி கஸ்துாரிபாய் தாய்சேய் நலவிடுதி யில், மாநகராட்சி கமிஷனர் பிருத்திவிராஜ் தொடங்கி வைத்தார். உலக சுகாதார நிறுவனம், 2014ல் போலியோ இல்லாத இந்தியா என சான்று அளித்தது. எனினும் நமது பக்கத்து நாடுகளில் போலியோ தொற்று இன்று வரை இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்டத்தில், 77,132 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிக்காக கிராம பகுதியில், 732 முகாம்களும், மாநகராட்சி, நகராட்சி பகுதியில், 114 முகாம் என, மொத்தம், 846 முகாம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக பல்வேறு அரசு துறைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, 3,483 பணியாளர்கள் ஈடுபட்டனர்.இன்று முதல், 4 வரை விடுபட்ட, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்.,களில் உள்ள அங்கன்வாடி மையம் பள்ளி வளாகம், பொது சுகாதார நிலைய மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில், கிருஷ்ணராயபுரம் சட்ட சபை தொகுதி த.வெ.க., எம்.எல்.எ., சத்யா, வரவனை பஞ்., அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. அங்கு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.