மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் வட்டார தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமப்புற பகுதி போராட்டக்குழு விவசாயிகள் சார்பாக, மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.சிந்தாமணிபட்டி துணை மின் நிலையம் முன் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் வீரமலை தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகராஜ், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, கஸ்துாரி தங்கராஜ், நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிவேல், ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கராசு ஆகியோர் பங்கேற்றனர்.இதையடுத்து கரூர் செயற்பொறியாளர் (பொது) கனிகைமார்டால், மேற்பார்வை பொறியாளர் பரிமளா, குளித்தலை செயற்பொறியாளர் (டி.என்.பி.டி.சி.எல்.,) முருகானந்தம், சிந்தாமணிபட்டி உதவி செயற்பொறியாளர் சிராஜீதீன் ஆகியோர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்று (4ம் தேதி ) இரவு முதல், மும்முனை மின்சாரம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.