மரங்கள் வெட்டி கடத்தல்: போலீசில் பொது மக்கள் புகார் மனு
குளித்தலை, குளித்தலை அடுத்த கழுகூர் பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்காக, 50 சென்ட்டில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள மயானத்தில், குடிநீர், எரிமேடை, மின் விளக்குகள் வசதி இன்றி உள்ளது. மேலும் மயானத்தை சுற்றி விவசாய நிலங்கள் அமைந்துள்ளதால், ஒரு சிலர் மயான இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர். 50 சென்ட் நிலமாக இருந்த மயானம் தற்போது 10 சென்ட் நிலமாக சுருங்கி விட்டது.இந்நிலையில் கழுகூர் மயான நிலத்தில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள வேப்ப மரங்கள், சீமை கருவேல மரங்கள் இருந்தது. இதை சிலர் வெட்டி அகற்றி செல்வதாக கிடைத்த தகவல்படி, கழுகூர் மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் அங்கு சென்றனர்.கழுகூர் மயானத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில், வளர்ந்திருந்த வேப்பமரங்கள், சீமை கருவேல மரங்களை அரசு அனுமதியின்றி, எப்படி வெட்டி அகற்றலாம் என தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.இதில் ஆக்கிரமிப்பாளர் களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் பிரச்னை ஏற்பட்டது.பின்னர் மரங்களை வெட்டிய நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதனால் அங்கிருந்த மரங்களை பறிமுதல் செய்த பொதுமக்கள், கழுகூர் பஞ்., நிர்வாகம், தோகைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர். அதில், கழுகூர் பகுதியை ஆய்வு செய்து மயானத்திற்கு உரிய இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவும், அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.