மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு ரூ.54.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
குளித்தலை:கடவூர் அருகே இடையப்பட்டி மேற்கு கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்து பேசியதாவது:பருவமழை காலம் தொடங்கவுள்ளதால், விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். அனைவரும் தங்களுடைய விபரங்களை, விவசாயிகள் பதிவேட்டில் பதிவு செய்து, தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகை, உரம் மற்றும் வேளாண் இயந்திர பயன்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடிநீர் மற்றும் உணவு பாத்திரங்களை மூடிவைத்து, டெங்கு கொசு உருவாகாமல், பரவாமல் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு, பால் கொள்முதல் விலையை ஆவின் மூலம் உயர்த்தி வழங்கி வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களையும் வழங்கி வருவதால் அதன் முழு பலனையும் பயன்படுத்தி கொள்ளலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து, போதை பொருட்களின் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.இதையடுத்து, 54.68 லட்சம் ரூபாய் மதிப்பில், 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முத்துக்குமரன் வழங்கினார்.நிகழ்ச்சியில் குளித்தலை சப்-கலெக்டர் சேஷத்திரி மயும் தீபு சானு, சப்-கலெக்டர் (சமுக பாதுகாப்பு திட்டம்) ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குனர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முகமது பைசல், தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.