அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுகோள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 18 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி ஆகியவை முக்கிய பகுதிகளாக உள்ளன. தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி, 40 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது. ஆனால், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இங்கு இல்லை.பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சியில் இருந்து, 30 கி.மீ., துாரமுள்ள கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அல்லது 35 கி.மீ., துாரமுள்ள க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கணவர், மாமியார் கொடுமை, வீடு மற்றும் பொது இடங்களில் பாலியல் தொந்தரவு என, பல்வேறு வகையில் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கெல்லாம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்றுதான் புகார் கூறும் நிலை உள்ளது.அரவக்குறிச்சியில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க உயர் அதிகாரியிடம், இப்பகுதி மக்கள் சார்பில், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பெண்கள் பிரச்னைக்கு தீர்வுகாண, அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.