நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுகோள்
குளித்தலை:மாயனுார், லாலாபேட்டை, முசிறி, தொட்டியம், காட்டுப்புத்துார், தாத்தையங்கார் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அய்யர்மலை அரசு கலைக் கல்லுாரி, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் பயன்பாட்டுக்காக, சுங்ககேட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் அமைக்கப்பட்டது.ஆனால் நிழற்கூடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, டீ, காபி வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் நிழற்கூடத்தில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மழை காலங்களில், கால்நடைகள் போல நின்று காத்திருந்து பஸ் ஏற வேண்டிய நிலை இருந்து வருகிறது.பொதுமக்கள் நலன் கருதி, அய்யர்மலை மார்க்கத்திற்காக கட்டப்பட்ட நிழற்கூடத்தை விரிவுபடுத்தி, மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.