மேம்பாலத்தின் கீழ் கழிவுநீர் தேக்கத்தால் நோய் பரவும் அபாயம்
கரூர்: சரியான வடிகால் வசதி இல்லாததால், ரயில்வே மேம்பாலத்தின் கீழ், கழிவுநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.கரூர் ஐந்து சாலை பகுதி வழியாக நெரூர், வாங்கல் பகுதிகளுக்கு, பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்கின்றன. இதில், பாலம்மாள்புரம் அருகில் ரயில்வே உயர்மட்டம் பாலம் உள்ளது. இப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீர், ரயில்வே மேம்பாலம் கீழ் தேங்கி நிற்கிறது. இதனால், ஐந்து சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மழைநீர் தேங்கி நிற்கும் போது, இச்சாலை வழியாக மக்கள் நடந்து கூட செல்ல முடிவதில்லை. தற்போது, கழிவு நீர் இங்கு குளம் போல் தேங்கியுள்ளது. வெளியேற வழியில்லாததால், பல நாட்களாக தேங்கி நிற்கிறது.இந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது, கழிவுநீர் தெறிப்பதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரயில் பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.