உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரின் ரோப் கார் ஒத்திகை

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரின் ரோப் கார் ஒத்திகை

குளித்தலை: அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ரோப் காரில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டால், பயணிகளை பாதுகாப்புடன் மீட்பது எப்படி என்பது குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக இருந்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் செங்குத்தாக உள்ள, 1,017 படிகளை தாண்டி சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. பக்தர்கள் சிரமப்பட்டதால், தமிழக அரசு (ரோப் கார்)கம்பிவட ஊர்தி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று மாதங்களுக்கு முன், ரோப்கார் வசதியை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.இந்நிலையில், ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் செயல்பட்டு வரும், ரோப் கார் சேவையை இரண்டு நாட்கள் தங்கி ஆய்வு செய்வதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படையினர், அரக்கோணம் மண்டல துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையில், 32 வீரர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் ரோப்காரில் மலை உச்சிக்கு சென்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். பின், ரோப்காரில் எதிர்பாராத வகையில் சிக்கி கொண்டால், பயணிகளை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை வருவாய்த்துறை மண்டல துணை தாசில்தார் சித்ரா, குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் தங்கராஜூ, அரசு கலை கல்லுாரி முதல்வர் அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், ரோப்காரில் பயணிக்கும் போது பாதிக்கப்படும் பயணிகளை மீட்பது குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இரண்டு நபர்களை மீட்டு, முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் மீட்கும் போது மீட்பு படையினருக்கோ, பயணிக்கோ பாதிக்காத வகையில், தரையில் சுருள் வளைதளம் அமைத்து, வீரர்கள் பிடித்துக் கொண்டனர். பின்னர், காற்று அடித்த பலூனை தரைமட்டத்தில் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லுாரி மாணவ மாணவியர். அரசு நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மேலும் ரோப்கார் பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒத்திகை நிகழ்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை