மாநில அளவிலான யோகா போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
குமாரபாளையம் :குமாரபாளையத்தில், அரசு சார்பில் யோகா போட்டி நடந்தது. இதில் குறைந்தளவே, அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.இது குறித்து, இந்திய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலர் அரவிந்த் கூறியதாவது: குமாரபாளையத்தில், தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். கோடை விடுமுறை என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான முறையில் தகவல் தர முடியாமல், மாநில அளவிலான போட்டியில், 120 பேர் மட்டுமே பங்கேற்றனர். இங்கு நடைபெறும் போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த ஒரு மாணவ, மாணவியர் கூட பங்கேற்கவில்லை.அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தகவல் தராததால், அவர்களால் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். இது போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு அதிகாரிகள், கோடை விடுமுறைக்கு முன்பே கொடுத்திருந்தால், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று இருப்பர்.இவ்வாறு கூறினார்.மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பொ) ஜெயலட்சுமி, நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர்.