உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்து குதறியதில் மாணவர் படுகாயம்

அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்து குதறியதில் மாணவர் படுகாயம்

கரூர், டிச. 20-கரூர், வெங்கமேடு அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த நாய் கடித்து குதறியதில், எட்டாம் வகுப்பு மாணவர் பலத்த காயமடைந்தார். மேலும் தெருவில் விளையாடிய, இரண்டரை வயது குழந்தையையும் நாய் கடித்துள்ளது.கரூர் மாநகராட்சியில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், கால்நடைகளை கடித்து வருகின்றன. மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. கரூர், வெங்கமேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 152 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தர்னிஷ், 13, என்ற மாணவர் படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளி வளாகத்தில் புகுந்த நாய், அவரை விரட்டி கடித்ததால் பலத்த காயமடைந்தார்.உடனே மாணவரை ஆசிரியர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளியை விட்டு வெளியே வந்த நாய், அங்குள்ள தெருவில் விளையாடி கொண்டு இருந்த, இரண்டரை வயது குழந்தை அஞ்சனாவை கடித்துள்ளது. அதில், குழந்தை சிறிய காயத்துடன் தப்பி உள்ளது.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு வீசப்படும் மீன்களை தின்பதற்கு ஏராளமான நாய்கள் வருகின்றன. மீன்கள் கிடைக்காத போது, மனிதர்களை வெறி பிடித்து கடிக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது, 10க்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன. குழந்தைகள், மாணவர்கள், வயதானவர்கள், தபால்காரர், பால்காரர், டெலிவரி ஊழியர்கள் என எல்லோருமே நாய்களை பார்த்து அச்சத்துடனே கடக்கின்றனர். பள்ளி வளாகத்தில் நாய் புகுந்து கடித்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலையில் மாணவர்கள் வந்தவுடன், பள்ளி வளாக கதவை மூட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ