ரேஷன் கடையில் விலையில்லாத கரும்பு வெளி மார்க்கெட்டில் விலை உயர்வு
கரூர் : பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் விலையில்லாத கரும்பு வழங்கப்பட உள்ளது. இதனால், வெளி மார்க்கெட்டில் கரும்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி, சர்க்கரை, முழு நீளம் கொண்ட கரும்பு வழங்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரேஷன் கடைகளில் விலையில்லாத கரும்பு வழங்க, கூட்டுறவு துறை மூலம், விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், செங்கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நடப்பாண்டு விலை உயர்ந்துள்ளது.கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதில்லை. இதனால், கரூர் மாவட்ட செங்கரும்பு தேவைக்கு, ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, கொடுமுடி, ஊஞ்சலுார், தஞ்சாவூர் மாவட்டத்தில் திருகாட்டுப்பள்ளி, மதுரை மாவட்டத்தில் மேலுார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் நன்கு விளைந்த, 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 250 முதல், 300 ரூபாய் வரை விற்றது. தற்போது ஒரு கட்டு, 400 முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு, 50 ரூபாய் வரை விற்பனையாகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம், விலையில்லாமல் முழு கரும்பு வழங்குகிறது. இதனால், கூட்டுறவு அதிகாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து, செங்கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மார்க்கெட்டுக்கு வரும் செங்கரும்புகளின், அளவு குறைந்து விட்டதால், விலை அதிகரித்து விட்டது.இவ்வாறு தெரிவித்தனர்.