ரூ.9,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் சுற்றிவளைப்பு
திருச்சி:கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், புகளூர் காகித தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணியில் இருந்தபோது, திருச்சி மாவட்டம், மேக்குடியில் தன் மனைவி, மகன் பெயர்களில் வீட்டுமனைகளை வாங்கியுள்ளார். இவற்றை தற்போது பிரித்து, தனித்தனி பட்டா பெற, ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஸ்ரீரங்கம் நில அளவை அலுவலகத்தில், சர்வேயர் அருண் என்பவரை அணுகினார். அவரோ, தனிப்பட்டா வழங்க, 24,000 ரூபாய் பேரம் பேசி, இறுதியாக 9,000 ரூபாய் கேட்டுள்ளார். தர விரும்பாத ராஜேந்திரன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைப்படி, நேற்று ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் ராஜேந்திரன் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது, அதை வாங்கிய அருண், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.