நெருங்கும் பொங்கல் பண்டிகை மண் பானை தயாரிப்பு மும்முரம்
கரூர்: பொங்கல் பண்டிகைக்காக, மண் பானைகள் தயாரிப்பு சுறுசுறுப்படைந்துள்ளது.தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வரும், 14ல் போகியுடன் தொடங்குகிறது. அப்போது, பராம்பரியமாக பொங்கல் வைக்க, தமிழர்கள் மண் பானைகளை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள், விவசாயிகளை தவிர பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மாணவ, மாணவியர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் லாலாப்பேட்டை, பசுபதிபாளையம் ஐந்து சாலை, பஞ்சமாதேவி, புலியூர், வெள்ளியணை உள்ளிட்ட இடங்களில் மண் பானை தயாரிப்பு துவங்கியுள்ளது.இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மண் பானைகளுக்கு ஆர்டர் வர தொடங்கியுள்ளது. பொங்கல் விழா-வுக்கு, 13 நாட்கள் உள்ள நிலையில், மண் பானைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. மண்பானைகளின் அளவை பொறுத்து, 150 முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படு-கிறது. அதேபோல் மண் அடுப்பு, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.