உடைந்த நிலையில் கம்பம் அச்சத்தில் பொதுமக்கள்
கரூர், நவ. 9-கரூர் அருகே, சிமென்ட் மின் கம்பம் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்து, நான்காவது வார்டு காலனி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக சிமென்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.ஆனால், பல மாதங்களாக சிமென்ட் மின் கம்பத்தின் அடிப்பகுதியில், விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கயிறு மற்றும் கொசுவலை ஒயரால் கட்டி வைத்துள்ளனர்.மின் கம்பம் சேதம் குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், மின் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். புலியூர் வட்டார பகுதிகளில், தற்போது மழை பெய்து வருகிறது. சேதம் அடைந்த மின் கம்பம் இடிந்து விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, புலியூர் டவுன் பஞ்சாயத்து, நான்காவது வார்டில், காலனி தெருவில் சேதமடைந்த மின் கம்பத்தை, அதிகாரிகள் மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.