கரூரில் பராமரிப்பு செய்த இடங்களில் தார் சாலை இல்லாததால் அவதி
கரூர், நவ. 9-கரூரில் பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு நடந்த பகுதியில் தார் சாலை அமைக்கப் படவில்லை. வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.கரூர் அண்ணாவளைவு சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்தது. அதை சரி செய்ய குழிகள் தோண்டப்பட்டு, பராமரிப்பு பணி நடந்தது. தற்போது, பராமரிப்பு பணி முடிந்த நிலையில், புதிதாக தார் சாலை அமைக்காமல், சிமென்ட் ஜல்லிக்கற்கள் கொட்டி குழியை மூடியுள்ளனர்.இதனால், மழை பெய்யும் போது, அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், அந்த பகுதியில் ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர், பூ மார்கெட், ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் அண்ணா வளைவு சாலை பகுதியில், பாதாள சாக்கடை குழாய் பராமரிப்பு நடந்த இடத்தில், புதிதாக தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.