சாலையில் நடவு செய்த மரங்கள் துளிர் விட தொடக்கம்
கரூர், கரூர்-ஈரோடு சாலை விரிவாக்க பணியில், அங்கிருந்த மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நடவு செய்த, 37 மரங்கள் துளிர் விட தொடங்கி உள்ளன.சாலை விரிவாக்கத்தின்போது, பல தலைமுறைகளை கடந்த மரங்கள் கூட வெட்டப்படுகின்றன. இதில், கரூர்- - ஈரோடு குட்டக்கடையில் இருந்து புன்னம்சத்திரம் வரை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. அங்கிருந்த வேப்பமரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நெடுஞ்சாலை துறை சார்பில், வெட்டப்பட இருந்த மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு மறு வாழ்வு அளித்துள்ளனர்.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:சாலையில் இருந்த வேப்பமரங்களின் கிளைகளை கவாத்து செய்து, கிளையின் நுனி பகுதியில் சாணம் தடவி, கிளையை சணல் சாக்கில் மூடி கட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிளைகள் வழியாக உயிர் சத்துக்கள் வெளியேறாமல் இருக்கவும், வேகமாக துளிர்க்கவும் இம்முறை கையாளப்படுகிறது. மரத்தின் அடிப்பகுதியை ஒட்டி, 3க்கு3 அளவில் குழி எடுத்து கிரேன் மூலம் மரத்துக்கு எந்த காயமும் படாமல் வேருடன் எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக மரம் நடவு செய்கின்ற இடத்தில், பெரிய மரமாக இருந்தால், 10க்கு10, சிறிய மரமாக இருந்தால், 6-க்கு 6 அளவில் குழி எடுத்தோம்.இதையடுத்து மரம் எடுத்த இடத்திலிருந்து, தாய் மண்ணை எடுத்து வந்து குழியில் போடப்பட்டது. பின், மரத்தை எடுத்து குழியில் வைத்து நடவு செய்து, அடிப்பகுதியில் மண் நிரப்பப்பட்டது. இவ்வாறு குட்டக்கடையில், 19 மரங்கள், ஆசாரிபட்டறையில், 11 மரங்கள், புன்னம்சத்திரத்தில், 7 என மொத்தம், 37 மரங்கள் நடப்பட்டன. சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது நட்டு வைத்துள்ள மரங்கள் துளிர் விட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.