ப.வேலுார் ராஜவாய்க்காலில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, 81 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த படுகை அணையின் இடதுபுறத்தில் ராஜ வாய்க்கால் தொடங்குகிறது. காவிரி ஆற்றின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதற்காக, சில நாட்களுக்கு முன் ராஜா வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் ப.வேலுார் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், 'ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், நேற்று விவசாய பாசன வசதிக்காக, ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பு விழாவில், ப.வேலுார் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வினோத்குமார், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ராஜவாய்க்காலை நம்பி காவிரி கரையோர பகுதிகளான ப.வேலுார், ஜேடர்பாளையம், பரமத்தி, பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்ட மங்கலம், ஜேடர்பாளையம், பொய்யேரி, நன்செய் இடையாறு விவசாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை, தென்னை, மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தண்ணீர் திறப்பால், 16,150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பாசன வசதி பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.