குறுவை சாகுபடியில் களை எடுக்கும் பணி
குளித்தலை:குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களில், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குளித்தலை பகுதிகளான நங்கவரம், நச்சலுார், குறிச்சி, சூரியனுார், நெய்தலுார், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி போன்ற பகுதிகளில் ஆற்றுப்பாசனமாகவும்; கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனுார், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்.டி.,மலை, வடசெரி, ஆலத்துார், பாதிரிப்பட்டி உட்பட, 17 பஞ்.,களில், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பருவமழை முறைப்படி பெய்துவந்தால், மேற்கண்ட பகுதிகளில் விவசாய பணில் எப்போதும் தீவிரமாக நடக்கும். தற்போது, ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணற்றுப்பாசன விவசாயிகள், குறுவை சாகுபடி செய்துள்ளனர். இதில், அட்சய பொன்னி, கோ-51, எ.எஸ்.பி.,-16, ஆடுதுரை-36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர். குறுவை நெல் மணிகள், 105 நாட்களில் இருந்து, 110 நாளில் மகசூல் பெறும். தற்போது, குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் களை எடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.