த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தவரின் மனைவி ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பினார்
கரூர், கரூரில் நடந்த த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தவரின் மனைவி, 20 லட்ச ரூபாயை நேற்று திருப்பி அனுப்பினார்.கரூர் மாவட்டம், ஆட்சிமங்கலம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரை சேர்ந்தவர் ரமேஷ், 35; இவர் கடந்த செப்., 27ல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.இதையடுத்து, ரமேஷ் குடும்பத்துக்கு த.வெ.க., சார்பில், 20 லட்ச ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், த. வெ.க., சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் வழங்கிய, 20 லட்ச ரூபாயை உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி, 30, நேற்று இந்தியன் வங்கி மூலம், த.வெ.க.,வின் வங்கி கணக்குக்கு திருப்பி அனுப்பினார். இதுகுறித்து, ரமேஷ் மனைவி சங்கவி கூறியதாவது: த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்த ரமேஷ் எனது கணவர். இதனால் விஜய், 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். முன்னதாக, விஜய் வீடியோ காலில் பேசும் போது, நேரில் கரூரில் வந்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் வரவில்லை. மாறாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரும்படி, த.வெ.க.,வினர் அழைத்தனர். ஆனால், நான் செல்லவில்லை. மகனுக்கு உடம்பு சரியில்லை. இதனால், நான் வரவில்லை என சொல்லி விட்டேன். ஆனால், கணவரின் அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜூனன், உறவினர் பாலு ஆகியோரை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் சென்றது எனக்கு தெரியாது.விஜய் நேரில் ஆறுதல் கூற வராததால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, த.வெ.க., சார்பில் விஜய் வழங்கிய, 20 லட்ச ரூபாயை இன்று (நேற்று) வங்கி மூலம் திருப்பி அனுப்பி விட்டேன். இவ்வாறு, அவர் கூறினார்.