வேகத்தடைகளுக்கு வெள்ளை அடிக்கும் பணியில் தொழிலாளர்கள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், பல்வேறு பகுதிகளில் உள்ள வேகத்தடைகளுக்கு, நெடுஞ்சாலை துறை சார்பில் வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது.சாலைகளில் விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் இருப்பதை தெரியப்படுத்தவும், வெள்ளை அடிக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பள்ளிகள், வளைவுகள் மற்றும் அதிக போக்கு வரத்து உள்ள இடங்களில் இப்பணி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட ஏவிஎம் கார்னர், அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் வெள்ளை நிறம் மறைந்த காரணத்தால், வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இந்நிலையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்போது வேகத்தடைகளுக்கு வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.