கிருஷ்ணகிரியில் கனமழை மரம் விழுந்து வாகனங்கள் சேதம்
கிருஷ்ணகிரியில் கனமழை மரம் விழுந்து வாகனங்கள் சேதம்கிருஷ்ணகிரி, அக். 20-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக, கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. விடிய, விடிய மழை விட்டு, விட்டு பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், சாலையோரம் அபாயகரமாக இருந்த யூக்கலிப்டிஸ் மரம், வேருடன் பெயர்ந்து அருகில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் வெங்கடேஸ், 40, என்பவரது மாருதி ஆல்டோ கார் மற்றும் டூவீலர்கள் மீது சாய்ந்தது. இதில், கார் முற்றிலும் சேதமடைந்தது. கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் தாலுகா காவல் நிலையம் எதிரே காமராஜர் நகரில் புளியமரம் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமையிலான அதிரடிப்படையினர், சாய்ந்த மரத்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பொழிவும் காணப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ஓசூரில், 42.1 மி.மீ., கிருஷ்ணகிரி, 33.4, போச்சம்பள்ளி, 25, தேன்கனிக்கோட்டை, 24, பாம்பாறு அணை, 16, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., டேம், 14, பெணுகொண்டாபுரம், 10, நெடுங்கல், 7.8, ராயக்கோட்டை, 7, ஊத்தங்கரை 6.4, கெலவரப்பள்ளி அணை 6, பாரூர் 3.6 மி.மீ., அளவில் பதிவாகி இருந்தது.