தண்ணீர் தேவையில் தன்னிறைவுபெற்ற மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழும்
'தண்ணீர் தேவையில் தன்னிறைவுபெற்ற மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழும்'கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளிலும் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை 2025- ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தினை பனிப்பாறை பாதுகாப்பு என்ற சிறப்பு கருப்பொருளினையொட்டி கொண்டாட உள்ளது. நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்கு வரிசை எண் 6-ல் வரும், 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைய நாம் தனி மனிதனாக குடும்பமாக, சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும். பனி பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் உயருகிறது. இதனால் பருவம் தவறிய மழை, புவி வெப்பமாதல் போன்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. புவி வெப்பமாவதை தடுப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். மழைநீரை நாம் சேகரிக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்டமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கூடுதலாக குடிநீர் தொட்டிகள் கட்டப்படவுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் தண்ணீர் தேவை யில் ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழும். இவ்வாறு அவர் பேசினார்.திட்ட இயக்குனர்(ஊரக வளர்ச்சி) கவிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாதேவன், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, பி.டி.ஓ.,க்கள் சரவணன், பாபி பிராஸ்சினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.