விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு: மூன்று பேர் கைதுஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே நல்ராலப்பள்ளியை சேர்ந்தவர் ஜெய்சந்திரன், 44, விவசாயி; இவர் மனைவி ஜெயலட்சுமி, 40. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த, 2016ல், ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த ஜெய்சந்திரன், சரியாக நடக்க முடியாததால், தன் தாய் முனிவெங்கடம்மாவுடன் ஊரில் வசித்து வந்தார்.அவரது மனைவி மற்றும் மகன், மகள் பெங்களூருவில் வசிக்கின்றனர். கடந்த மே, 12 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் ஜெய்சந்திரன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்த போது, சிலர் வீட்டிலிருந்து வெளியே ஓடினர்.வீட்டிற்குள் டப்பாவில் வைத்திருந்த அரிசி கொட்டி கிடந்தது. அதிலிருந்த, நான்கரை பவுன் நகை, 32,000 ரூபாய் மற்றும் ஜெய்சந்திரனின் மொபைல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது. ராயக்கோட்டை போலீசில் ஜெய்சந்திரன் புகார் செய்தார். விசாரணையில், கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டணம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கார்த்திக், 21, மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்து, 3 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், பணம், நகையை பறிமுதல் செய்தனர்.ஓசூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் திறப்புஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராயன் ஜிபி மற்றும் சின்ன எலசகிரி மாநகராட்சி துவக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், தனியார் நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து மொத்தம், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, மாநகர மேயர் சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, பகுதி செயலாளர் திம்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.லாரியின் பின்னால் பைக்
மோதல்; வாலிபர் பலி
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி புதுாரை சேர்ந்தவர் சின்னரசு, 21; இவர் நேற்று முன்தினம் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் கிருஷ்ணகிரி நோக்கி வந்துள்ளார். காலை, 8:30 மணியளவில் அவதானப்பட்டி அருகே தர்மபுரி கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது முன்னாள் சென்ற லாரி, எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென்று நின்றது. பின்னால் வேகமாக வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறம் மோதியதில் சின்னரசு பலியானார். கே.ஆர்.பி., டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.பணம் தராத கள்ளக்காதலியை
கத்தியால் கீறியவருக்கு வலை
கிருஷ்ணகிரி: தர்மபுரியை சேர்ந்தவர் பெருமாள். தற்போது கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதுாரை சேர்ந்த பெருமா, 40 என்ற பெண்ணுடன் கடந்த, 7 ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது.கடந்த, 16ல் கோனேகவுண்டனுார் அருகில் நின்ற பெருமாவிடம் பணம் கேட்டு பெருமாள் தொந்தரவு செய்துள்ளார். பணம் தரமறுத்த பெருமாவை, கத்தியால் கீறிவிட்டு பெருமாள் தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த பெருமா புகார் படி, மகாராஜகடை போலீசார் பெருமாளை தேடி வருகின்றனர்.