டேங்கணிபுரத்துக்கு வேட்டைக்கு வந்த வேங்கடேஸ்வரன்
டேங்கணிபுரத்துக்கு வேட்டைக்கு வந்த வேங்கடேஸ்வரன்கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவல்லி தாயார் சமேத பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம், 17 ல் பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று ராமபாணம் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். விழாவையொட்டி நாளை பல்லக்கு உற்சவம் நடக்கிறது.கோவில் தல வரலாறுமகார்வணன் என்பவன் தேவர்களாலும், மனிதர்களாலும் தோல்வி அடையாமல் இருக்க, கோகர்ண ேஷத்திரத்தில் தவம் செய்து, நான்முகனிடம் வரம் பெற்றான். இதனால் அபாரமான வலிமை பெற்று, மிகுந்த செருக்குடன் தேவர்களை துன்புறுத்தியதால், அவன் தேவகண்டகன் என பெயர் பெற்றான். நினைத்தபடி உருமாறும் வரம் பெற்றிருந்த அந்த அரக்கன், ஒரு நாள் அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து, முனிவர்களை அச்சுறுத்தும் பொருட்டு, புலி உருவத்தை எடுத்து கர்ஜித்தான். அதை கண்டு அத்ரி மகரிஷி அவனுக்கு புலி உருவமே நிலைத்திருக்கட்டும் என சாபமிட்டார். சாப விமோசனத்திற்கு வழி வகுக்க வேண்டும் என தேவகண்டகன் வேண்டினான். அதற்கு, எப்போது திருவேங்கடத்திலுள்ள திருவேங்கடேஸ்வரன், டெங்கணி என்ற கதை(கோடாரி)யால் உன் உச்சியை பிளப்பாரோ, அப்போது உன் சாபம் நீங்கும் என, அத்ரி மகரிஷி கூறினார். அன்று முதல் தேவகண்டகன் காட்டில் வாழ்ந்து வந்தான்.கன்வ முனிவர் ஒருவர், அத்ரி மகரிஷி யோக சித்தி அடைந்த ஆசிரமத்திற்கு சென்று, ஐம்புலன்களையும் அடக்கி கடும் தவம் செய்தார். மேலும் சில ரிஷிகளும், முனிவர்களும் அங்கு தவத்திற்காக வந்தனர். அவ்வப்போது அங்கு புலி உருவம் கொண்ட தேவகண்டகன் வந்து, முனிவர்களை அச்சுறுத்தி, கொடுமைகள் செய்து, அவர்களது மாமிசத்தை சாப்பிட்டு வந்தான். ஒரு நாள் தன் வலிமையை நினைத்து கர்வம் கொண்டு, அந்த அரக்கன் கடும் தவத்திலிருந்த கன்வ முனிவரிடம் ஓடி வந்தான். கன்வ முனிவர் தன் கடும் தவ வலிமையால் அவனை விரட்டியடித்தார். இதேபோல் தினமும் தேவகண்டகன், கன்வ முனிவர் தவத்திற்கு இடையூறு செய்து வந்தான். அப்போது கன்வ முனிவர் இங்கும் எனது தவத்திற்கு தடை வந்ததே என்ன செய்வேன் என சிந்திக்கும் போது, வானில் ஒலித்த அசரீரி, 'முனிவரே மனப்பூர்வமாய் திருவேங்கடேசனான ஹரியை அடைக்கலம் அடைந்தால், உன் கஷ்டம் நீங்கும்' என்றது. அதேபோல், கன்வ முனீவரும் திருவேங்கடேசனை தியானித்து, புலி உருவம் கொண்டுள்ள அரக்கனை அழித்து, யோக சித்தி அருள வேண்டும் என வேண்டினார். திருவேங்கடேசனான ஸ்ரீஹரி, திருவேங்கடத்திலிருந்து புறப்பட்டு, விசித்திரமான ஆபரணங்களை அணிந்து, வெற்றி முழக்கத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன், வேட்டைக்கு ஏற்ற கோலத்துடன் கன்வ முனிவரின் ஆசிரமம் நோக்கி சென்றார்.வேங்கடேஸ்வரனின் நாண் ஒலியை கேட்டு புலி உருவம் கொண்ட தேவகண்டகன் மிகவும் கோபத்துடன் வந்தான். அங்கு, தேவகண்டகனுக்கும், வேங்கடேஸ்வரனுக்கும் போர் நடந்த நிலையில், தேவகண்டகன் மாயையினால் மறைந்து யுத்தம் செய்ய துவங்கினான். தன்னை நெருங்கி வந்த தேவகண்டகனை கொல்ல, வில்லில் நாண் ஏற்றுவதற்கு நேரமில்லாமல், டேங்கணி என்ற கதையால், மகா விஷ்ணு அரக்கனின் உச்சியில் அடித்தார். அதனால் மண்டை உடைந்து மரணம் அடைந்த அரக்கனுக்கு முன்பிறவி ஞானம் ஏற்பட்டு, திருவேங்கடேசனை வழிபட்டான். இந்த திருத்தலம் டேங்கணிபுரம் என்ற பெயரால் புகழ் அடைய வேண்டும் என வேண்டினான். திருவேங்கடேசன் வேட்டைக்காரனாக கோலம் பூண்டு அரக்கனை அழித்தமையால், இங்குள்ள கோவிலில் உள்ள மூலவர், பேட்டராய சுவாமி என அழைக்கப்படுகிறார். டேங்கணிபுரம் தான் நாளடைவில் தேன்கனிக்கோட்டையாக மாறியது. பேட்டராய சுவாமி கோவில் வளாகத்தில், ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், சவுந்தரவல்லி தாயார் சன்னதிகள் உள்ளன.பூஜை நேரம்கோவிலில் தினமும் காலை, 7:00 முதல், 10:00 மணி வரையும், மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரையும் இருகால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு வார சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிேஷக ஆராதனைகள் நடக்கும். தனுார் மாதத்தில், 30 நாட்களும் சிறப்பு பூஜை, வைகுண்ட வாசல் பிரவேசம், பரமபத சேவை, 10 நாட்கள் திருவாய்மொழி திருநாள், தசரா உற்சவம் ஆகியவை சிறப்பாக நடக்கும். கிருஷ்ண ஜெயந்தியன்று திருமஞ்சன உற்சவமும், மறு நாள் உறியடி உற்சவமும் சிறப்பாக நடக்கும். தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவராக உள்ள சீனிவாசன் குடும்பத்தினர், பக்தர்கள் நிதியுதவியுடன் கோவிலுக்கு வேண்டிய பணிகளை செய்து வருகின்றனர். இவரது தந்தை தான், தேருக்கான சக்கரங்களை வாங்கி கொடுத்தார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்படும் இக்கோவிலில் செயல் அலுவலராக சாமிதுரை மற்றும் ஆய்வாளராக வேல்ராஜ் உள்ளனர்.பக்தர்களுக்காக பகவான்வெங்கடேசனாகிய ஸ்ரீஹரி கன்வ மகரிஷியின் தவத்தை காக்க வேண்டி, வேட்டைக்காரனாக உருவெடுத்து வந்த திருத்தலம். அத்ரி மகரிஷி முனிவர் முதல் பல்வேறு முனிவர்களும் தவம் செய்து சித்தியடைந்த புனித தலம். பக்தர்களை காக்க பகவான் என்றும் தவறுவதில்லை என்பதை பறைசாற்ற, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பூவுலகில் பிரவேசித்து அருளிய தலம் இதுவாகும்.