உயர்கல்வியில் இந்தியா உலகளவில் முதலிடம்
ஓசூர், ஓசூர், அதியமான் பொறியியல் கல்லுாரி மற்றும் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. அதியமான் கல்வி குழும இயக்குனர் ரங்கநாத் வரவேற்றார். அதியமான் கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்துமணி முன்னிலை வகித்தனர். கல்வியாளர் சம்பத்குமார் மாணவ, மாணவியரை ஊக்குவித்து பேசினார். தொடர்ந்து, அதியமான் கல்வி குழும நிறுவனரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பிதுரை தலைமை வகித்து பேசியதாவது: அமெரிக்காவில் கடந்த, 1960ல், 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது, 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதற்கு, அந்நாட்டிலுள்ள இளைஞர்கள் உயர் கல்வி படிக்காதது தான். அமெரிக்கா மற்றும் சீனா உலக பொருளாதாரத்தில், 70 சதவீதத்தை வரும், 2050ம் ஆண்டுக்குள் தங்கள் வசமாக்கி விடும். உற்பத்தியில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் தருவதால் தான், உயர்கல்வி உலகளவில் முதலிடத்தில் உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.அதியமான் கல்லுாரி டீன் வெங்கடேசன் செல்வம், மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.