அரூர் போலீஸ் ஸ்டேஷன் முன்10 பேர் தீக்குளிக்க முயற்சி
அரூர் போலீஸ் ஸ்டேஷன் முன்10 பேர் தீக்குளிக்க முயற்சிஅரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலப்பட்டி புதுாரை சேர்ந்தவர் மனோகரன், 38. இவருக்கும், பக்கத்து நிலத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக மனோகரன், உறவினர் சங்கர், 51, என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மதியம், அரூர் போலீசில் புகார் அளித்தார். அன்றிரவு, 8:40 மணிக்கு சங்கர் வீட்டிற்கு சென்ற முருகேசன் மற்றும் அரூர் பழையபேட்டையை சேர்ந்த அருண் ஆகியோர், கொடுவாளை கையில் வைத்துக்கொண்டு, மனோகரனுடன் எதற்கு சென்றாய் எனக்கேட்டு, சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மொபைல்போன் மூலம், அரூர் போலீசுக்கு சங்கர் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடம் சென்ற அரூர் போலீசார், முருகேசன், அருண் ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து எச்சரித்து அனுப்பினர். நேற்று காலை, 11:00 மணிக்கு, சங்கர், மனோகரன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் அரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அப்போது, பாதுகாப்பு வழங்கக்கோரி, தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.