செல்லகுட்டப்பட்டியில் மஹாபாரத பெருவிழா
செல்லகுட்டப்பட்டியில் மஹாபாரத பெருவிழாபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, செல்லகுட்டப்பட்டி தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் மஹாபாரத பெருவிழா கடந்த 18 நாட்களாக நடந்து வந்தது. நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், அக்னி வசந்த பெருவிழா, தொடர்ந்து மஹாபாரத தொடர் சொற்பொழிவு மற்றும் பாரத பெருவிழாவின் தொடர் நாடக நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து அர்சுணன் தபசு, அம்மன் பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், கண்ணன் துாது, அரவன் கடபலி, அபிமன்னன், சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் களிமண்ணால், 20 அடி நீளம், 4 அடி அகலத்தில் உருவாக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தை, பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.அப்போது பாஞ்சாலி தன் கூந்தலை முடிந்து, சபதத்தை நிறைவேற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து, கிராம மக்கள், பஞ்ச பாண்டவர்களின் சிலையை துாக்கி ஆடியபடி, ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். பின்னர் கிராம மக்கள், பூசாரியிடம் துடைப்பத்தால் தலையில் அடி வாங்கி, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.