உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சொத்து தகராறு: தந்தை, தங்கையை கொன்றவர் கைது வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து வெட்டியதால் பரபரப்பு

சொத்து தகராறு: தந்தை, தங்கையை கொன்றவர் கைது வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து வெட்டியதால் பரபரப்பு

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கொட்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் வரதன், 80; விவசாயி. இவருக்கு லவகிருஷ்ணன், 57, மணவள்ளி, 55, மங்கம்மாள், 45, கணேசன், 47, கிருஷ்ணன் என, ஐந்து மகன், மகள்கள் இருந்தனர். இதில், கிருஷ்ணன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மணவள்ளி கணவனை பிரிந்து கொட்டுகாரன்பட்டியில் தந்தையுடன் வசித்தார். வரதனுக்கு மூன்றம்பட்டியில், தன் மனைவி வழியில் வந்த பூர்வீக சொத்து, 3.50 ஏக்கர் நிலம் உள்ளது. மணவள்ளி தந்தையின் சொத்து கேட்டு, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், வரதனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதன் பின், சொத்து பங்கு குறித்து, பலகட்ட பேச்சு நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. லவகிருஷ்ணன் பலமுறை சொத்து கேட்டும் வரதன் தர மறுத்துள்ளார். மாறாக மகள்களுக்கு சொத்தை எழுதிக் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த லவகிருஷ்ணன், தந்தை, தங்கையை கொலை செய்ய ஒரு வாரமாக, கத்தியுடன் சுற்றித் திரிந்தார். வரதனும், மணவள்ளியும் மூன்றம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், நிலத்தின் அனுபவ சான்றிதழ் பெற நேற்று காலை, 10:30 மணிக்கு வந்தனர்.வி.ஏ.ஓ., கலையரசி அலுவலகத்தில் இல்லாதநிலையில், அவரது வருகைக்காக தந்தையும், மகளும் அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்தனர். உடன் வி.ஏ.ஓ., உதவியாளர் வெற்றிவேல் உள்ளிட்ட சிலர் இருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்ததும், லவகிருஷ்ணன் வி.ஏ.ஓ., அலுவலகம்சென்றார். தந்தையிடம், சொத்தை தனக்கு தரும்படி கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்,மறைத்து வைத்து இருந்த கொடுவாளாள் தங்கை மணவள்ளியை வெட்டினார். இதைப்பார்த்து பதறி, தடுக்க வந்த வரதனையும் வெட்டினார்.இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லவகிருஷ்ணனின் ஆவேசத்தை பார்த்து வெற்றிவேல் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வி.ஏ.ஓ., அலுவலகம் விரைந்தனர். வழியில் போலீசாரை பார்த்த லவகிருஷ்ணன், தான் தந்தை, தங்கையை கொலை செய்து விட்டதாக கூறி, சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தந்தை, தங்கையை, விவசாயி கொலை செய்தது, கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ