ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவி காயம்
ஓசூர்: ஓசூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியை அடித்ததில் மாணவி காயமடைந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளி அருகே, எஸ்.குருபட்டியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. ஓசூர் அருகே, பேலகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்; நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவியிடம், ஆங்கில ஆசிரியை, பாடம் சம்பந்தமாக கேள்வி கேட்டுள்ளார். மாணவிக்கு பதில் சொல்ல தெரியாததால், குச்சியால் மாணவியை ஆசிரியை அடித்துள்ளார். இதில் மாணவியின் வலது கையில் வீக்கமும், இடது கையில் காயமும் ஏற்பட்டுள்ளது.மாலையில் வீடு திரும்ப முடியாமல், வலியால் துடித்த மாணவி பள்ளியிலேயே அமர்ந்திருந்தார். பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். மாணவிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என பெற்றோர் தெரிவித்ததால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.