உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டில் படுத்தால் பேய் பிடிக்கும் என பயந்து வேப்ப மரத்தடியில் துாங்கி வந்த தொழிலாளி

வீட்டில் படுத்தால் பேய் பிடிக்கும் என பயந்து வேப்ப மரத்தடியில் துாங்கி வந்த தொழிலாளி

திருப்பத்துார், ஜன. 3-வீட்டில் படுத்தால் பேய் பிடிக்கும் என பயந்து, இரவு நேரங்களில் திருப்பத்துார் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள, வேப்ப மரத்தடியில் துாங்கி வந்த தொழிலாளியை, போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். திருப்பத்துார் டவுன் போலீசார், நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை எதிரில் உள்ள வேப்பமரத்தின் அடியில், ஒருவர் படுத்து துாங்கி கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர், ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகரை சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 40, என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், 'வீட்டில் படுத்தால் பேய் பிடிக்கும் என பயந்து, கடந்த சில மாதங்களாக, பகல் நேரங்களில் வீட்டில் இருந்துவிட்டு, இரவு நேரத்தில் துாங்க ஜோலார்பேட்டையிலிருந்து, திருப்பத்துாருக்கு பைக்கில் வந்து, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வேப்ப மரத்தடியில் துாங்கிவிட்டு, அதிகாலையில் சென்று விடுவது' தெரியவந்தது.போலீசார் இவர் கூறியதை நம்பாமல், அவரது மொபைல்போனை வாங்கி, குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அவர்களும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை, இனிமேல் இங்கு படுக்க வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ