ஆண்டுக்கணக்கில் சாலையில் தேங்கும் கழிவுநீர் அதிகாரிகள் நடவடிக்கை இல்லையென புகார்
கிருஷ்ணகிரி, ஆண்டுக்கணக்கில் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு முதல், ஸ்ரீராம் நகர் செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் வசதி சீராக இல்லை. இதனால் பல வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது.மேடும், பள்ளமுமாக அமைந்துள்ள இப்பகுதி குடியிருப்பில், முறையான திட்டமிட்டு கால்வாய் அமைக்காததால், பல இடங்களில் ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. ஆண்டுக்கணக்கில் தேங்கும் கழிவுநீரால் புதிதாக அமைத்த தார்ச்சாலை சேதமடைந்து வருகிறது. புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பல பகுதிகளில் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மாதக்கணக்கில் குப்பையும் அகற்றுவதில்லை. சாக்கடை கால்வாய்க்கு பஞ்., நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை மட்டும் எடுத்த நிலையில், தற்போது அதிகாரிகள், இவற்றை முழுமையாக கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தினமும் இச்சாலை வழியாக சென்று வரும் நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க, யாருக்கும் மனமில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஆண்டுக்கணக்கில் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.