| ADDED : அக் 18, 2025 01:05 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு கூட்டம், தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்தது. கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், மாநகர நல அலுவலர் அஜிதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது:
தெருநாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்கும் விதமாக, கால்நடை மருத்துவ குழுவினருடன் இணைந்து, நடமாடும் அறுவை சிகிச்சை மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், மண்டல அளவிலான ஒவ்வொரு பகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு நாய்களுக்கான உணவு வழங்கும் மையம் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.தெருநாய் கடிகளுக்கு ஆளாகும் மக்களுக்கு, அவற்றிலிருந்து பாதுகாத்து மருத்துவ சிகிச்சைகள் பெறுவது தொடர்பாக விழிப்புணர்வை பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.