போலி பி.எம்., கிசான் ஆப் அனுப்பி பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.8 லட்சம் மோசடி
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் நாகராஜன், 68; பா.ஜ., வர்த்தக பிரிவு மாநில இணை அமைப்பாளர். இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு கடந்த, 12ம் தேதி மதியம் போலி 'பி.எம்., கிசான் ஆப்' வந்தது. இதை மொபைலில் பதிவிறக்கம் செய்தார். அப்போது அவரது போனை 'ஹேக்' செய்து, வங்கி கணக்கிலிருந்து அடுத்தடுத்து, 18 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. கட்சி கூட்டத்திலிருந்த நாகராஜன் மொபைல்போனை 'சைலண்டில்' வைத்திருந்ததால், பணம் எடுக்கப்பட்டதை அறிய முடியவில்லை. கூட்டம் முடிந்து பார்த்தபோதுதான், 18 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.உடனடியாக வங்கி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். இதில் கடைசியாக கொல்கத்தாவிலல் 'ஐ.டி.எப்.சி., வங்கி'யில் கணக்கு வைத்துள்ள ஜெயா பிஸ்வால் கணக்குக்கு சென்ற, 10 லட்சம் ரூபாயை வங்கி நிர்வாகம் திரும்ப எடுத்தது.ஆனால் கொல்கத்தாவின் 'பந்தன் வங்கி'யில் கணக்கு வைத்துள்ள அபித் உசேன், சொரூப் தாஸ் கணக்கிற்கு சென்ற, எட்டு லட்சம் ரூபாயை திரும்ப பெற முடியவில்லை. நாகராஜன் புகார்படி கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.