ஓசூரில் துாய்மை பணி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தன்னார்வ அமைப்பான சி.எம்.சி.ஏ., மற்றும் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், மூக்கண்டப்பள்ளியில் துாய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, துாய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடைகள் தோறும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், மாநகராட்சி குப்பை வண்டிகள் வரும் போது, மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.ஓசூர் மூக்காண்டப்பள்ளியில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டாமல் தடுக்க, மரக்கன்று நடப்பட்டன. எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்துமணி, சி.எம்.சி.ஏ., உறுப்பினர் டேவிட், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் லெனின், திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.