கட்சியினருடன் வந்த மாணவியரை கண்டித்த கலெக்டர்
கிருஷ்ணகிரி; தலைமை ஆசிரியை மீ து புகார் அளிக்க, நா.த.க.,வினருடன் வந்த மாணவியரை, கிருஷ்ணகிரி கலெக்டர் கண்டித்து அனுப்பினார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று, வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஆறு மாணவியர், நா.த.க., துண்டு அணிந்த ஒருவர் மற்றும் சிலருடன், தலைமை ஆசிரியை மீது புகாரளிக்க வந்தனர். அவர்களுடன் பெற்றோர் வரவில்லை. கலெக்டர் அலுவலக முகப்பில் நின்ற போலீசார், 'பெற்றோர் இல்லாமல் நீங்கள் எப்படி புகார் அளிக்க வரலாம்? உங்களுக்கு யார் பாதுகாப்பு?' என, கேட்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் சிலர், மாணவியருக்கு ஆதரவாக வந்து, கலெக்டரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அ ப்போது அவர்கள், கலெக்டர் தினேஷ்குமாரிடம், 'தலைமை ஆசிரியை, மாணவியருக்கு குடிநீர், கழிப்பறைகளுக்கு தண்ணீர் வழங்குவதில்லை. ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு கூட வரவில்லை' என்றனர். அவர்களிடம் கலெக்டர் தினேஷ்குமார், 'இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கோ, வேறு யாருக்கோ புகாரளித்தீர்களா?' என்றார். அவர்கள், 'இல்லை' என்றபோது, 'நானோ, சி.இ.ஓ.,வோ உங்களை பார்க்க மாட்டோம் என கூறினோமா? உங்கள் குறைகளை போனில் ஒரு மெசேஜ் கூட செய்யவில்லை' என்றார். 'பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப நாங்கள் அரும்பாடுபட்டு வரும் நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். ' இது கடைசி முறையாக இருக்கட்டும். உங்கள் பிரச்னைகளை என்னை சந்தித்து கூறுங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும்' என, கட்சிக்காரர் உட்பட உடன் வந்தவர்களிடம், கலெக்டர் கறாராக கூறினார். பின், மாணவியரிடம், 'பள்ளியை கட் அடிக்கக்கூடாது' என, கண்டிப்புடன் கூறி, அனுப்பி வைத்தார்.