சாலையின் குறுக்கே இருந்த திருமலை தேவர் கோவில் இடிப்பு
ஓசூர், ஓசூரில், தளி சாலையோரமுள்ள அந்திவாடியில், 300 ஆண்டுக்கு மேல் பழமையான திருமலை தேவர் என்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஓசூர், வேளாங்கண்ணி பள்ளி முதல், உப்பாரப்பள்ளி வரை, 8.10 கி.மீ., துாரத்திற்கு, தளி சாலையை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, முதல்வரின் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 54 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், இருபுறமும் சாலை அமைக்கப்படும் நிலையில், திருமலைதேவர் கோவில், சாலை மையப்பகுதிக்கு வந்து விட்டது. எனவே, கோவிலை இடித்து அகற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் கடந்த, 5 மாதங்களுக்கு முன் அனுமதி கேட்டது. அதற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சமீபத்தில் அனுமதி வழங்கிய நிலையில், கோவிலில் இருந்த துளசிமாடம், சிலைகள் அகற்றப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின், மாநில நெடுஞ்சாலைத்துறை ஓசூர் உதவி கோட்ட பொறியாளர் முருகன் முன்னிலையில், நேற்று பொக்லைன் வாகன உதவியுடன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. மக்கள் திரண்டதால், பிரச்னை ஏற்படாமல் தடுக்க, போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.