ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் காரில் கடத்திய டிரைவர்கள் கைது
ஓசூர்:கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் மது கடத்திய, 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., அமர்நாத் மற்றும் போலீசார், சூளகிரி கனரா வங்கி அருகே வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த மாருதி பிரீசா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 198 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 2,686 ரூபாய் மதிப்பிலான, கர்நாடகா மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. இதனால் காரை ஓட்டி வந்த, கர்நாடகா மாநிலம், மாலுார் அருகே இந்துமங்கலம் பகுதியில் வசிக்கும், சென்னை கோவிலம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த ராஜேஷ், 25, மற்றும் மற்றொரு டிரைவரான சென்னை கொரட்டூர் ஸ்டேஷன் சாலையில் வசிக்கும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேம்பத்துாரை சேர்ந்த சதீஷ், 34, ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர்.இதில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, சென்னைக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வதும், அதை, சென்னை சென்றவுடன், யாராவது ஒருவர் வந்து வாங்கி செல்வர் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்தனர்.