உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணை நீரில் 3வது நாளாக பொங்கும் நுரை

கெலவரப்பள்ளி அணை நீரில் 3வது நாளாக பொங்கும் நுரை

ஓசூர்:ஓசூர், கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்பட்டுள்ள உபரி நீரில், மூன்று நாட்களாக ரசாயன நுரை அதிகமாக உள்ள நிலையில், 8,000 ஏக்கர் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கர்நாடகா மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு அந்த மாநிலத்தில், 112 கி.மீ., துாரம் பயணித்து, சிங்கசாதனப்பள்ளி வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் சுத்திகரிப்பு செய்யாமல் திறந்து விடப்படுகிறது. இந்த அசுத்தமான நீரை தான், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள, ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வளத்துறை சேமித்து வைக்கிறது.நீர் இருப்பை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகளை சுமந்து வரும் நீரை, கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடும் போது, தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுக்கும்.கடந்த, 16ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து, மூன்று நாட்களாக தென்பெண்ணை ஆற்றுக்கு, 290.83 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து, வழக்கமான மதகுகள் வழியாக நீர் திறக்காமல், அணையின் அடிப்பகுதியில் உள்ள மணல் போக்கி மதகு வழியாக தென்பெண்ணை ஆற்றில், 202.83 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள நீரில் ரசாயன நுரை அதிகமாக உள்ளது.கால்வாயில் நீர் செல்வது கூட தெரியாத அளவிற்கு நுரை படர்ந்துள்ளது. இந்த நீரில் தான், 8,000 ஏக்கர் விவசாய நிலங்களில் காய்கறிகள், நெல் போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். தென்பெண்ணை ஆறு விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பதால், கர்நாடகா மாநில அரசும் அலட்சியமாக கழிவுகளை ஆற்றில் கலப்பதை கண்டுகொள்வதில்லை. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ