உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் விடியவிடிய கொட்டித்தீர்த்த கனமழை குடியிருப்புகள், தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்தது வெள்ளம்

ஓசூரில் விடியவிடிய கொட்டித்தீர்த்த கனமழை குடியிருப்புகள், தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்தது வெள்ளம்

ஓசூர்:ஓசூரில் பெய்த, 12 செ.மீ., மழையால், வீடுகள், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியில், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், மழை வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பெய்ய துவங்கிய கனமழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதன்படி, தமிழகத்திலேயே ஓசூரில் அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பதிவானது. ஓசூர் அருகே திப்பாளம் ஏரி நிரம்பி, ஆர்.ஆர்., கார்டன் குடியிருப்பிலுள்ள ஓடை வழியாக உபரி நீர் வெளியேறியது. ஓடையை துார்வாராமல், கரையை பலப்படுத்தாமல் இருந்ததால், உபரி நீர் அப்பகுதி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, 50க்கும் மேற்பட்ட குடியிருப்பை சூழ்ந்தது. மக்கள் இரவில் துாக்கத்தை தொலைத்தனர். கனமழையால் சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியில், பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், மழைநீர் தேங்கியது. அதனால் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர், பார்வதி நகரை சேர்ந்தவர் சூடப்பன், 19; ஓசூர் அரசு கலைக்கல்லுாரியில், பி.பி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். இவர், தன் குடும்பத்துடன், நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது கனமழையால் ஆஸ்பெட்டாஸ் ஷீட், வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து, சூடப்பன் மீது விழுந்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. குந்துமாரனப்பள்ளி அருகே போத்தசந்திரத்தை சேர்ந்த மணி என்பவரது வீட்டு சுவர், கனமழைக்கு இடிந்து விழுந்தது. அதேபோல், அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையம் அருகே பூந்தோட்டபள்ளத்தை சேர்ந்த விவசாயி முத்து என்பவரின் கறவை மாடு, இடி தாக்கி பலியானது. ஓசூர் தர்கா சந்திராம்பிகை ஏரி நிரம்பி, கே.சி.சி., நகர் வழியாக உபரி நீர் வெளியேறியது. அப்பகுதியிலும் கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சேரன்மகாதேவி அருகே காருகுறிச்சி, உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், கூனியூர், சக்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்தன. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜூனில் துவக்கப்பட்ட கார் பருவ நெல் சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. வடகிழக்கு பருவமழை சற்று முந்திக் கொண்டதில் இந்த மழையாலும் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன. திருப்பத்துார் திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்ததில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியதால், நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பாலாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கால், பெரியபேட்டையிலிருந்து கோட்டை பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், பெரியபேட்டை, கொடையாஞ்சி, அம்பலுார், உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஜவ்வாதுமலையில் பெய்த பலத்த மழையால் ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், நீர்வீழ்ச்சியின் அருகே சென்று சுற்றி பார்க்கவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை