பிளஸ் 1 தேர்வில் கி.கிரி மாவட்டம் 33வது இடத்திற்கு தள்ளப்பட்டது
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், பிளஸ் 1 தேர்வில், 88.31 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில், 33வது இடத்தை மட்டுமே பிடித்தது.தமிழகம் முழுவதும், நேற்று பிளஸ் 1 தேர்ச்சி விபரங்கள் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம், 193 பள்ளிகளை சேர்ந்த, 21,977 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 19,408 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம், 88.31. மாநில அளவில், 33வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. மாவட்டம் முழுவதிலும் உள்ள, 40 பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்றது.இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு உடனடியாக துணை தேர்வு நடத்தப்பட்டு, அவர்களை தேர்ச்சி பெற வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மொத்தமாக, 33வது இடம் பிடித்த போதிலும், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில், 30வது இடத்தை பிடித்து முன்னேறியுள்ளோம். மாநில அளவில் தேர்ச்சி விகிதம் குறைந்த மாவட்டங்களில், ஒன்றாக பார்க்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. வரும் காலங்களிலும், பத்தாம் வகுப்பு, மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாதனை படைக்கும்,' என்றனர்.