தளி ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் அவதி அந்திவாடி ஏரிக்கரையில் சாலைக்கு கோரிக்கை
ஓசூர், ஓசூரில், தளி ரயில்வே கேட் மூடும் போது, வாகன ஓட்டிகள் அவதிப்படுவதால், அந்திவாடி ஏரிக்கரை மீது, சாலை அமைக்க கோரிக்கை வலுத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தளி சாலையில் தினமும், 50,000 வாகனங்களுக்கு மேல் சென்று வருகின்றன. இதன் குறுக்கே உள்ள ரயில்வே கேட் தினமும், 30 முறைக்கு மேல் மூடப்படுவதால், அந்த நேரத்தில் ஓசூர் - தளி சாலையில் இருபுறமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்குவதோடு, அதன் தாக்கத்தால், ரிங்ரோட்டிலும் போக்குவரத்து பாதிக்கிறது. ஒரு முறை ரயில்வே கேட் மூடி, திறந்தால், போக்குவரத்து நெரிசல் சரியாக, அரை மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது.அதனால், தளி சாலை ரயில்வே கேட் பகுதியில், உயர்மட்ட பாலம் கட்ட கடந்த மாதம், 14ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த, முதல்வர் ஸ்டாலின், 90 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், இன்னும் வரைபட அனுமதி வழங்கி, ஒப்புதல் வழங்காமல் உள்ளதால், பாலம் பணி துவங்காமல் உள்ளது. பணி துவங்கினால், ஓசூரிலுள்ள, தளி சாலையில் போக்குவரத்து பாதிக்கும். இதனால், ரயில்வே கேட் அருகே உள்ள எஸ்.பி.எம்., காலனி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, அந்திவாடி ஏரிக்கரை மீது, 1.50 கி.மீ., துாரம் சாலை அமைத்தால், வாகனங்கள் எந்த இடையூறுமின்றி தேன்கனிக்கோட்டை சாலைக்கு செல்ல முடியும். அதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஓசூர், தி.மு.க., - எம்.எம்.ஏ., பிரகாஷ், முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அந்திவாடி ஏரியில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஒரு கல்வெட்டு அமைத்து, ஏரிக்கரையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சமன் செய்து சாலை அமைத்தால், ரயில்வே கேட்டில் மேம்பால பணி துவங்கினாலும், ரயில்வே கேட் மூடினாலும், மக்கள் எளிதாக தேன்கனிக்கோட்டை சாலைக்கு சென்று, அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய ஏரியாவிற்கு செல்ல முடியும். மேம்பால பணி துவங்கும் முன், ஏரிக்கரை சாலையை அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.