தேசிய மாணவர் படை துவக்கம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,075 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.,) நடப்பு கல்வியாண்டு முதல், 100 மாணவர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் முதற்கட்டமாக, 50 பேர் தேசிய மாணவர் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராக, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சூடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய மாணவர் படை துவக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை நர்மதாதேவி தலைமை வகித்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா முன்னிலை வகித்தனர். 11 வது தமிழக சிக்னல் கம்பெனி என்.சி.சி., யூனிட் கர்னல் சூரஜ் எஸ். நாயர், மாணவர் படையை துவக்கி வைத்து, ஆலோசனை வழங்கி பேசினார். ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.