அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கிருஷ்ணகிரி தி.மு.க., நகராட்சி தலைவர் பதவி பறிப்பு
கிருஷ்ணகிரி: தி.மு.க.,வை சேர்ந்த கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் ஆதரவுடன் வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக இருந்தவர் தி.மு.க.,வை சேர்ந்த பரிதா நவாப். இந்நகராட்சியில், தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவது, கமிஷனருடன் மோதல் போக்கு என, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், பரிதா நவாப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, நகராட்சி கமிஷனர் சதீஷ்குமாரிடம் கடந்த, 16ம் தேதி சக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மனு அளித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற, 5ல், 4 பங்கு கவுன்சிலர்கள் ஆதரவு தேவை. தி.மு.க., கவுன்சிலர்கள், 21 பேர் மற்றும் சுயேச்சைகள், 4 பேர், காங்., கவுன்சிலர் ஒருவர் என, 26 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தனர். மேலும், ஒருவர் தேவை என்பதால், 9வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் நாகஜோதியை, தி.மு.க., கவுன்சிலர்கள், தங்கள் பக்கம் இழுத்தனர். நேற்று முன்தினம் மாலை வரை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமியிடம் பேசி வந்த நாகஜோதி, இரவுக்கு பின், தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்க சென்றார். கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பில் பங்கேற்க, தி.மு.க., கவுன்சிலர்கள், 21 பேர், 4 சுயேச்சைகள், காங்., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தலா ஒருவர் வீதம் ஆம்னி பஸ்சில் வந்தனர். காலை, 11:00 மணிக்கு துவங்கிய ஓட்டெடுப்பில், மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில், 6 பேர் பங்கேற்காத நிலையில், பங்கேற்ற, 27 கவுன்சிலர்களும் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்ததால், தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உடல்நல பாதிப்பால், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிதா நவாப் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அ.தி.மு.க.,வினர் தர்ணா
அ.தி.மு.க., கவுன்சிலர் நாகஜோதியை, தி.மு.க.,வினர் கடத்தி விட்டதாக கூறி, அ.தி.மு.க.,வினர், கவுன்சிலர்கள் அழைத்து வரப்பட்ட பஸ்சின் டிரைவர் பக்க ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் தலைமையிலான கட்சியினர், நகராட்சி அலுவலக நுழைவுவாயில் கேட் முன் திரண்டனர். அவர்களை நகராட்சிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். நாகஜோதியை கடத்தி விட்டதாக, அசோக்குமார் மற்றும் கட்சியினர், டி.எஸ்.பி., முரளி தலைமையிலான போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் தடுத்ததால், கேட் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., முரளி தன் மொபைல் போனில், நகராட்சி வளாகத்திற்குள் இருந்த அ.தி.மு.க., கவுன்சிலர் நாகஜோதியிடம், தான் விருப்பப்பட்டு வந்ததாக அவர் பேசிய வீடியோவை எடுத்து வந்து, எம்.எல்.ஏ.,விடம் காட்டினார். அது போலி என, எம்.எல்.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.