குடிநீர் தராத பஞ்., நிர்வாகத்தை கண்டித்து மக்கள் சாலை மறியல்
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே, ஒரு வாரமாக குடிநீர் வழங்காத பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துகோட்டை பஞ்.,ல்., 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை, குந்துகோட்டை அருகே தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'கடந்த, 15 நாட்களாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் மோட்டார் பழுதாகி உள்ளதாக கூறி, பஞ்., நிர்வாகத்தினர் தண்ணீர் வழங்கவில்லை. ஒருவாரத்தில் சரிசெய்து விடுவோம் எனக்கூறிய நிலையில், 15 நாட்களாகியும், மோட்டாரை சீர்செய்யவில்லை. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.அவர்களிடம் வருவாய்துறையினர், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த மோட்டாரை உடனடியாக சீர் செய்து, குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இப்பகுதியில் நடந்த சாலைமறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.